Sunday, April 1, 2012

அடுத்தது எந்த தொகுதிக்கு அந்த லக்?

திருச்சி மேற்கு, சங்கரன்கோவில், புதுக்கோட்டை


சங்கரன்கோவில் தொகுதி மக்களைத்தொடர்ந்து புதுக்கோட்டை தொகுதி மக்களுக்கு ஓர் நற்செய்தி. இதனால் உங்களுக்கு அறிவிப்பது என்னவென்றால் இன்னும் ஒரு 6 மாதத்திற்குள் உங்களுக்கு எல்லாவிதமான மிக்சி, கிரைண்டர், ஆடு, மாடு, லேப்டாப், லொட்டு லொசுக்கு என அரசின் நலத்திட்டங்களும் கிடைக்க வழிபிறந்துள்ளது. ஆறுமாத காலத்தின் கடைசி ஒரு மாதத்திற்கு உங்களுக்கு மின்சாரத்தட்டுப்பாடு இருக்கவே இருக்காது. ஆறு மாதங்கள் முடியும் தருவாயில் உங்கள் ஊருக்கு எல்லா அமைச்சர்களும் வருவார்கள். உங்கள் ஊரிலேயே கிடையை போட்டுவிடுவார்கள். எந்த அமைச்சரையும் எம்.எல்.ஏயையும் நீங்கள் தேடிப்போகவேண்டியதில்லை. குளிப்பதற்கு பன்னீரும் வாய் கொப்பளிக்க பீரும் ஏற்பாடு செய்யப்படும். டாஸ்மாக் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். 'கற்றுக்கொண்ட படிப்பினைகள் மற்றும் இடைத்தேர்தல் டோர்-டெலிவரி நல்லிணக்கக்குழு' உங்களை திக்குமுக்காடச்செய்யும். சூதுவாதனமாக இருந்து ஆறு மாதத்திற்குள் தேவையானவற்றை கேட்டுப்பெற்றுக்கொள்ளவேண்டும். ஆஹா, நமக்கு நல்லகாலம் பொறந்துடுச்சுன்னு சங்கரன்கோவில் மக்கள் மாதிரி ஏமாளிகளாக இருக்கக்கூடாது.

ஆறு மாதம் முடிந்தவுடன் உங்களுக்கான ராஜமரியாதை ஒரே நாளில் போய்விடும். ஓட்டுப்போட்டபின் உங்கள் விரல் மை காய்வதற்குள் பஸ்கட்டணமோ, மின் கட்டணமோ, பத்திரப்பதிவு கட்டணமோ அல்லது எது அத்தியாவசிய தேவையோ அதன் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படும். உங்க ஊர்ல ஏதாவது தொழிற்சாலைக்கு எதிராக நீங்கள் போராடினால் இந்த ஆறு மாதகாலத்திற்கும் அரசாங்கம் உங்கள் பக்கம் இருக்கும். அது வரைக்கும் நீங்கள் என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். போராட்டங்களுக்கு கலெக்டர் நேரில் வந்து வாழ்த்துபா வாசிப்பார். கலவரங்களுக்கு எஸ்பி கல்லெடுத்து கொடுப்பார். உங்கள் ஒவ்வொரு முயற்சிக்கு பின்னாலும் அரசு யந்திரம் சுழலும். ஆனால் இது நிரந்தரம் என்று நீங்கள் வாயைபிளந்துகொண்டு நின்றுவிடக்கூடாது. ஓட்டுப்போட்டுவிட்டு வெளியே வந்து நின்று ஒய்யாரமாக நீங்கள் போட்டோவுக்கு போஸ் கொடுக்கமுயலும்போது உங்கள் மீது தேசதுரோக வழக்கு பாயும். குண்டர் சட்டம் நாலுகால் பாய்ச்சலில் வரும் - தனுஷ் மாதிரி ஒல்லியா இருக்கிறேன், என்னையெல்லாம் குண்டர் சட்டத்தில் போடமுடியாது என்றெல்லாம் நீங்கள் வாதாடமுடியாது. ஆகவே உங்களுக்கு என்னவெல்லாம் தேவையிருக்கிறதோ அதையெல்லாம் இப்பவே வாங்கிக்கொள்ளுங்கள். கடந்த ஆறு மாதங்களாக சங்கரன்கோவில் தொகுதி மக்கள் ராஜாவாக வலம்வந்தார்கள். இப்போது உங்களுக்கு அந்த கொடுப்பினை கிட்டியிருக்கிறது. இந்த ராஜயோகம் எல்லாருக்கும் கிட்டிவிடாது. எங்க ஊர்லயும்தான் எம்.எல்.ஏ இருக்காரு. எங்க தொகுதிக்கும் அந்த பாக்கியம் கிடைக்காதா என்று எல்லா தொகுதி மக்களும் ஏங்கிபோய் இருக்கிறார்கள். எங்க ஊரு எம்.எல்.ஏக்கு வயசு 60க்கும் மேல ஆய்டுச்சு. நானும் நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். நம்பிக்கைதானேங்க வாழ்க்கை.