Tuesday, August 14, 2012

ஆச்சார்யா ராஜினாமா - ஆச்சர்ய தகவல்கள்


பெங்களூருவில் இரண்டு மகாமகம் காணப்போகும் சொத்துகுவிப்பு வழக்கு, 'ஜெ.வின் சொத்துகுவிப்பு வழக்கு' என்றே குறிப்பிடப்பட்டு வருகிறது. உண்மையில் அது 'ஜெ.வின் ஊழல் சொத்துகுவிப்பு வழக்கு' என்றே குறிப்பிடப்படவேண்டும். 'ஊழல்' என்கிற வார்த்தையை பெரும்பாலான பத்திரிக்கைகள் பயன்படுத்ததவறுகின்றன, 2ஜி ஊழல் வழக்கு எப்படியோ அதேபோலத்தான் ஜெவின் ஊழல் வழக்கும். போகட்டும், இலக்கண வகுப்பு எடுப்பது என் எண்ணமில்லை. விஷயம் என்னன்னா, அசோக சக்கரவர்த்தி குளம் வெட்டி மரம் நட்ட நாட்களிலிருந்து ஜெவின் ஊழல் சொத்துகுவிப்பு வழக்கு  நடைபெற்று வருகிறது. செவ்வாய்கிரகத்தில் மனிதன் குடியேறி அந்தகிரகத்தின் சுற்றுப்புற சூழ்நிலையை மாசுபடுத்தும் திருநாள் வரை இந்த வழக்கு நடைபெறும் என்ற பேருண்மையை கண்டுணர்ந்த திமுக, மேற்படி வழக்கினை உச்சநீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் நடத்திடவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருக்கிறது. அந்த மனுவுக்கு பதில் சொல்வதற்கும் வாய்தா வாங்கியது ஜெவின் வாய்தா அணி,சாரி வழக்கறிஞர் அணி.

இந்நேரம் பார்த்து கர்நாடக அரசு சார்பாக சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ஆச்சார்யா 'மன் உளைச்சலை' காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அசைக்கவே முடியாத ஆலமரமாக இருந்த ஆச்சார்யா தானாகவே சாய்ந்ததை சுவீட் எடுத்து கொண்டாடி வருகிறது போயஸ் கார்டன். உண்மையில், ஆச்சார்யா இப்போதுதான் அதிக நெருக்கடியை ஜெவுக்கு தந்திருக்கிறார் என்பது என் எண்ணம். கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்படுவதாக ஆச்சார்யாவுக்கு குச்சி ஐஸை காட்டி ஏற்கனவே ஏமாந்திருந்த ஒரு லாபியினர், அவருக்கு தொடர்ந்து இம்சையை கொடுத்து வந்திருக்கின்றனறர். இவரும் எவ்வளவோ பொறுத்தப்பார்த்தார், முடியவில்லை. இப்போது உச்ச நீதிமன்றத்தின் முன்பாக வழக்கு வந்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

வழக்கு இழுத்துக்கொண்டே போகிறது என்று திமுக  உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருக்கும் இந்நேரத்தில் ஆச்சார்யாவின் ராஜினாமாவுக்கான காரணத்தையும் சொல்லி திமுக அடுத்த முறை வாதம் செய்யும். ராஜினாமா முடிவு ஆச்சார்யா தானாக எடுத்த முடிவாகயிருக்காது, நிச்சயம் ஏதோ உள்குத்து நடந்திருக்கவேண்டும். திமுக மனு செய்திருக்கும் வேளையில் ஆச்சார்யாவின் ராஜினாமா எழுப்பப்போகும் அதிர்வுகள் ரிக்டர் அளவுகோளில் குறிப்பிடத்தக்க பதிவுகளை தேவையானவர்கள் எதிர்பார்த்திருந்த அளவுக்கு ஏற்படுத்தும். கூட்டிகழிச்சுப்பாருங்க, கணக்கு சரியா வரும். எது எப்படியோ, கிரிஸ்டலை தின்னவன் ஹெ2ஓவை குடிச்சுத்தான் ஆகணும்.

Saturday, August 11, 2012

ராஜபக்சே ரொம்ப நல்லவன்டா

  TESO களேபரங்கள்

ஈழத்திற்காக நம்ம ஊர் அரசியல்வாதிகளின் சொந்த பங்களிப்பு என்ன?
சிலர் கனடாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பறந்தார்கள். கண்டம் விட்டு கண்டம் பாய்ந்துபோய் ஈழத்தமிழருக்காக சொற்பொழிவு ஆற்றினார்கள், ஆனால் ஈழத்தின் பக்கம் மட்டும் திரும்பவேயில்லை. அவர்களின் பாஸ்போர்ட்டில் எல்லா ஊர்களின் முத்திரையும் இருந்தது, இலங்கையைத்தவிர. இலங்கைக்கு போய் அதே வாய்ச்சவடாலை காட்டியிருந்தால் ஜட்டியை கழட்டி படுக்கப்போட்டு சுட்டுப்பொசுக்கி போட்டொ எடுத்து இன்டர்நெட்டில் உலவ விட்டிருப்பான் பொன்சேகா. ஆனா, நகரம் படத்தில் வடிவேலு சுந்தர் சி.யை வம்புக்கு இழுக்கிற மாதிரி நாலு ஸ்டெப் தள்ளி நின்றுகொண்டே கடைசிவரை குரைத்தார்கள். இன்னும் நின்றபாடில்லை. அவர்கள் நடத்திய கூட்டங்களுக்கும், காங்கிரசுக்கு எதிரான கண்டனங்களுக்கும் எந்த குறையுமில்லாமல் இனிதே நடந்தேறியது, நடந்தேறிக்கொண்டிருக்கிறது. ஆனால் அந்த கூட்டங்களினாலோ, வெளிநாட்டு பயணங்களினாலோ அங்கே வாடும் தமிழருக்கு ஏதேனும் ஒரே ஒரு நல்லதாவது நடந்ததா? ஒரே ஒரு உயிரையாவது காப்பாற்ற முடிந்ததா? இவர்களின் வாய்ச்சவடால் சிங்கள ராணுவத்தை மேலும் மேலும் சீண்டி இன்னும் வேகமாக அல்லவா இயங்க வைத்தது? படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் பிணத்தைவைத்து இங்கே பிழைப்பு நடத்தியவர்கள்தான் அதிகம். பறந்து பறந்து பணியாற்றியவர்களின் பாக்கெட்டுகள் டாலர்களாகவும் பவுண்டுகளாகவும் பல் இளித்ததுதான் மிச்சம்.  அதுநாள் வரை ஈழத்துக்காக எந்த ஒரு அடியும் எடுத்துவைக்காத ஜெயலலிதா, முந்தைய பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக பதிவான குறிப்பிட்ட அளவு ஈழ ஆதர்வாளர்களின் ஓட்டுக்களை மனதில் வைத்து இப்போது பார்ட்டைம் ஈழவாதியாகியிருக்கிறார்.

காலை சாப்பாடு செரிப்பதற்காக ஒன்றரை மணிநேரம் உண்ணாவிரதம் இருந்த கருணாநிதியும் இப்போது அதே ஈழத்தை வைத்து அரசியல் செய்துவிட்டுத்தான் போகட்டுமே? யாருக்கு என்ன நட்டம்?  யாருக்கும் எந்த லாபமும் கிடையாது - நானும் ஈழத்திற்காக போராடியவன் என்று பின்னாளில் தன்னுடைய கேள்வி-பதில் கட்டுரையில் பட்டியலிடுவதற்கு இந்த மாநாட்டையும் கருணாநிதி சேர்த்துக்கொள்ளலம் என்பதைத்தவிர. இறுதி யுத்தத்தின்போதும் சரி, இப்போதும் சரி, ஈழத்தமிழர்களின் பிணக்குவியல்கள் மீது தங்கள் வாய் என்னும் கடையைபரப்பி லாபம் பார்க்கும் உணர்ச்சியாளர்கள்தான், ஏதோ ஈழத்துக்கான பன்னாட்டு தூதர்கள் போலவும், ஈழம் என்றாலே அது தாங்கள்தான் வேற யாரும் தங்கள் உரிமையை பங்குபோட்டுக்கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தினாலும் டெசோ மாநாட்டிற்கு எதிர்ப்பு காட்டுகிறார்கள்.

இதற்கு முன்பிருந்தே போராடியவர்கள் ஏறிய அதே ஜீப்பில் தான் கருணாநிதியும் இப்போது வாலன்டியராக போய் ஏறுகிறார். என்ன ஒரே ஒரு பிரச்சனை, ஏற்கனவே ஜீப்பில் இருப்பவர்களுக்குள்ளேயே இட நெருக்கடி. கொரில்லா செல் ஏற்கனவே ஹவுஸ்ஃபுல். கொஞ்சம் கஷ்டம்தான், இருந்தாலும் இவரும் இருந்துவிட்டுப்போகட்டுமே. இந்த மாநாடு முடிந்தவுடன் ராஜபக்சே சகோதரர்கள் தாங்கள் செய்த பாவங்களுக்காக பாவ மன்னிப்பு கேட்கப்போகிறார்களா அல்லது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஏதேனும் நிவாரணம் கிடைத்துவிடப்போகிறதா? ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது.

ஆட்சியில் இல்லாமல் எதிர்கட்சியாக இருப்பவர்களுக்கு எப்பவுமே ஈழ விவகாரம் லட்டு மாதிரி. ஆளுங்கட்சியை காய்ச்சி எடுத்துவிடலாம். தமிழர் நலன், இனவுணர்வு, மனிதாபிமானம் எனப்பேசி ஆளுங்கட்சிக்கு சங்கடம் உண்டாக்க எளிதான வழி. ஆனால் எந்தக்கட்சி ஆளுங்கட்சியாக இருந்தாலும் ஒன்றையும் புடுங்கிவிடமுடியாது. ஆனா ஒண்ணுடா, ராஜபக்சேவாவது தன்னுடைய சொந்த நாட்டிற்காக குடும்பத்திற்காக கொடுங்கோலனாக இருந்தான். ஆனா செத்த பொணத்தை வச்சியும் வயிறு நனைகிற உங்களுக்கு ராஜபக்ஷே எவ்வளவோ பரவாயில்லடா.