Wednesday, December 21, 2011

அகில இந்திய பேரரசு - ஹரி ரசிகர்கள் மன்றம்

இவுங்களுக்குத்தான் ரசிகர் மன்றம் இல்லாம இருந்துச்சி, அதையும் நடத்திட்டாய்ங்களா என்று நினைக்காதீர்கள். இயக்குனர் பேரரசு, ஹரி போன்ற இயக்குனர்களைப்பற்றி தமிழ் சினிமா உலகில் ஒரு மோசமான பெயர் அதிமேதாவிகளால் ஏகபோகமாக ஏளனமாக பரப்பப்பட்டு வருகிறது. ஒரு மோசமான படத்தைப்பற்றி விமர்சிப்பதற்கு இந்த மாதிரியான இயக்குனர்களின் படங்கள் மேற்கோள் காட்டப்பட்டு மட்டம்தட்டப்படுகின்றன.

இந்த மாதிரி இயக்குனர்களின் படைப்பும் மதிக்கப்படவேண்டும். பிற படங்களில் வேலை செய்யாவிட்டாலும் அந்தப்படங்களின் வெற்றிக்கு இந்த ஸோ-கால்டு மசாலா இயக்குனர்களும் ஒருவிதத்தில் காரணமாகிறார்கள். நீங்கள் தியேட்டருக்கு படம் பார்க்கபோகிறீர்கள். அங்கே மைனா, மைதானம், தென்மேற்கு பருவகாற்று, நான் கடவுள், செங்கடல் மாதிரியான படங்கள்தான் ஓடுகின்றன என்று வைத்துக்கொள்வோம். இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து அதிலும் சில நொட்டைகள் சொல்லிவிட்டு வருவோம். அடுத்த வாரம் மறுபடியும் தியேட்டருக்கு போகிறீர்கள். அதுசமயம் சுப்ரமணியபுரம், காதல், எங்கேயும் எப்போதும் மாதிரியான சீரியஸான கதையம்சம் உள்ள படங்கள் ஓடுகின்றன. வேறு வழியில்லாமல் அதையும் பார்த்து தொலைத்துவிட்டு வருகிறீர்கள். இன்னும் ஒரு வாரத்தில் வேறு வழியே இல்லாமல் திரும்பவும் தியேட்டருக்கு செல்கிறீர்கள். அப்பவும் இதே மாதிரியான படங்களே ஓடிக்கொண்டிருந்தால் என்னாவது?

மலையாள சினிமா ஒருகாலத்தில் இதே மாதிரிதான் பெரும்பாலும் கதைக்காவே ஓடிக்கொண்டிருந்தன. அவர்களும் ரொம்ப பொறுமையாக இருந்தார்கள். ஒருகட்டத்தில் கதைவேட்கை போரடிக்க ஆரம்பித்த நேரத்தில் ஷகிலாவின் சதை அவர்களை கட்டிப்போட்டது. மலையாள சூப்பர்ஸ்டார்கள் ஷகிலாவை மிரட்டி விரட்டவேண்டிய அளவுக்கு போய்விட்டது.

மலையாள சினிமாவுக்கு அப்படிப்பட்ட ஒரு சோதனை வந்ததற்கு ஷகிலா எந்தவிதத்திலும் காரணமில்லை. லட்டு பிடிக்குமென்றால் ஆசைக்கு நான்கைந்து சாப்பிடலாம். ஆனால் அதுவே மூன்று வேளைக்கும் உணவாகும்பட்சத்தில் அந்த இனிப்பு வெகுவிரைவில் கசக்க ஆரம்பித்துவிடும். மேட்டருக்கு வருகிறேன்.

மலையாள தெலுங்கு சினிமா உலகங்கள் தமிழ்சினிமாக்களுக்கு அவுங்க அவுங்க ஏரியாவில் முடிந்தவரை தடைபோட முயற்சிக்கிறார்கள். ஆனால் நாம் நம்ம ஊரிலேயே நம்ம ஆட்களை கலாய்க்கிறோம். டி.ஆர்., பேரரசு, ஹரி, கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.ஜே.சூர்யா, விக்ரமன் போன்றோரின் பங்களிப்பு இல்லாமல் எல்லாமே சைவ திரைப்படங்களாக்வே இருந்திருந்தால்? கற்பனை செய்துபாருங்கள்.

நம்ம ஊர்லயும் எல்லா படங்களும் சீரியஸாகவே போய்கொண்டிருந்தால் அது நல்லதே அல்ல. ஒரு சமயத்தில் எல்லாவிதமான படங்களும் வருவதுதான் நல்லது. ஏனெனில் கதைக்காக யாரும் சினிமா பார்க்கவருவதில்லை. 99% பேர் பொழுதுபோக்கிற்காகத்தான் வருகிறார்கள்.அதிலும் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். எனவே அவர்களை மையப்படுத்திதான் எடுக்க முடியும். சினிமா மூலம் குடும்ப உறவுகளின் மேன்மையையோ அல்லது சமூக விழிப்புணர்வு படங்களையோ தந்து போட்ட காசை எடுக்கமுடியாது. இப்படி சொல்வதால் இனிமேல் படம் எடுக்கும் எல்லாருமே அயிட்டம் பாட்டில் ஆரம்பித்து குத்துப்பாட்டில் முடிக்கச்சொல்லி கேட்கவில்லை. ஆனால் இவை இல்லாமல் எல்லா படங்களும் சீரியஸாக வர ஆரம்பித்தால் திருட்டு விசிடியில் கூட பிறகு படம் பார்க்கமாட்டார்கள்.

சமீபத்தில் வெளியான படங்களில் சிங்கம்தான் மிக அதிக வசூலைத்தந்தது. எந்திரன், ஏழாம் அறிவு எல்லாமும் கூட அதிக வசூலைத்தந்திருக்கலாம். ஆனால் ஒரு படத்திற்கு ஆகும் செல்வையும் அது திரும்ப கொடுக்கும் வசூலையும் வைத்துபார்க்கும்போது ஏழாம் அறிவை விட சிங்கம் மிகப்பெரிய வெற்றி. சிறந்த விமர்சனங்களைபெற்ற மைனாவோ அல்லது சுப்ரமணியபுரமோ பெற்ற வெற்றியைவிட சிங்கம் பெற்ற வெற்றி பெரியது. படம் பார்க்க வருகிறவர்களுக்கு தேவை பொழுதுபோக்கு. அவர்களை திருப்தி செய்து அனுப்புவதே இயக்குனரின் முதல் கடமையாகும். விமர்சகர்களை மனதில் வைத்து படம் எடுத்தால் முதுகில் செல்லமாக தட்டி கொடுப்பார்கள். ஆனால் தலையில் விழுந்திருக்கும் துண்டு தரும் வலி அவர்களால் உணரமுடியாது.

பேரரசு படங்களில் வரும் காமெடி காட்சிகளை திறந்த மனதுடன் பாருங்கள் காமெடி பகுதி மிகவும் நன்றாகயிருக்கும். (ஆனால் பேரரசு ஸ்லோ மோஷனில் நடந்துவரும் காட்சியின்போது தயவுசெய்து சிறுவர்கள், கர்ப்பிணிபெண்கள், இருதய பலகீனமுள்ளவர்கள், வயதானோரை பக்கத்தில் வைத்துக்கொள்ளாதீர்கள்). சரிந்து விழுந்த நடிகர் விஜயின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியதே திருப்பாச்சிதான். எனவே இந்த மாதிரியான இயக்குனர்களின் படைப்பை கிண்டலுக்குள்ளாக்காதீர்கள்.

இவர்கள் படைப்பு இப்படித்தான் இருக்கும் என்ற பொது அறிவோடு செல்லுங்கள். பாலா படத்திற்கும், பேரரசு படத்திற்கும், சங்கர் படத்திற்கும், மணிரத்னம் படத்திற்கும் உள்ள வேறுபாட்டை முதலிலேயே தெரிந்துகொண்டு அதிக எதிர்பார்ப்பில்லாமல் போய் வாருங்கள். வித்தியாசத்தை உணர்வீர்கள். கட்டுரைக்கு கிளைமாக்ஸ் நெருங்கிவிட்டது. எனவெ முக்கியமான பகுதியை சொல்லி முடிக்கிறேன். நான் ஆரம்பிக்கப்போகும் அடுத்த ரசிகர்மன்றத்திற்கு எங்கள் பவர்ஸ்டார் டாக்டர் சீனிவாசன் அவர்களை மேடைக்கு வருமாறு அழைக்கிறேன்.

Monday, December 19, 2011

பழசுக்கு பதிலா புத்தம் புதுசு அதுவும் இலவசமாக

நெருங்கின நண்பனுக்கு இருதய அறுவைசிகிச்சைக்காக ரத்தம் தேவைப்பட்டபோது தொடைநடுங்கி பின்வாங்கிய நண்பர்களை அருகிலிருந்து கண்டிருக்கிறேன். ஆனால் எனக்குத்தெரிந்த வேறுசில நண்பர்கள் ரத்ததானம் கொடுப்பதை ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடு செய்கின்றனர். அதை அர்ப்பணிப்பு என்றுகூட சொல்லமுடியாது, அவர்களுக்கு அது ஒரு சுகமான சுமை. அவர்களுக்கு அது ஒரு விருப்பமான கடமை.

யார் அதிகம் முறை ரத்தம் கொடுத்தது என்பது போன்ற ஆரோக்யமான போட்டிகூட உண்டு அவர்களுக்குள். வீரியமுள்ள விதையிலிருந்து பிறந்தவர்கள். இத்தனை தடவை ரத்தம் கொடுத்தேன் என்று அவர்கள் பெருமை பீற்றிக்கொள்ளும்போது அவர்களைவிட குறைவானதடவை எண்ணிக்கை கொண்டிருந்த எனக்கு அவமானமாகப்போனதுண்டு. தமிழ் ஸ்டுடியோ இணையத்தின் நிறுவனர் நண்பர் அருண் போன்றோர் இந்த விஷயத்தில் எனக்கு மிகவும் சீனியர். பலதடவை புது ரத்தம் வாங்கியிருக்கிறார். வாங்கியிருக்கிறார் என்றவுடன் அவருக்கு ஏதோ நோவு, அதனால் ரத்தம் பெற்றார் என நினைக்காதீர்கள். அவர் பிறருக்காக ரத்தம் கொடுக்க கொடுக்க அவருடைய உடலில் புது ரத்தம் பாய்ச்சப்படுகிறதல்லவா, அதைச்சொன்னேன்.

ரத்ததானம் என்ற வார்த்தையே ஏதோ புனிதர்கள் ரேஞ்சுக்கு எடுத்துசெல்வதாகபடுகிறது. ரத்தம் கொடுக்கப்போனேன் என்று சொல்லும்போது நீங்கள் யாருக்கோ தருவதாக நினைத்துக்கொண்டு போகவேண்டாம். இருக்கிற பழைய பொருளை கொடுத்துவிட்டு வேறொரு சுத்தமான புதிய பொருளை இனாமாக வாங்கிவருவதாக நினைத்துக்கொள்வோம். எண்சாண் உடம்புக்குள் திரும்ப திரும்ப சுத்திகரிக்கப்பட்டு திரும்ப திரும்ப ஓடி அலைகிற ரத்தத்தை வேறு சுற்றுலா தளங்களுக்கு அழைத்துச்செல்வோமே? ஒரே உடம்பை ஆயுள் முழுவதும் சுற்றிவருவதற்கு ரத்தத்திற்கும் போர் அடிக்குமில்லையா? ரத்தம் கொடுப்பதினால் நாம் இழப்பது லிட்டருக்கும் குறைவான ரத்தமே. ஆனால் பெறுவது நிறைய. புதிய எனர்ஜெடிக்கான ரத்தம், ஒரு உயிரை காப்பாற்றிய புண்ணியம் முதல் குளுக்கோஸ் பாக்கெட் வரை.

சொல்ல மறந்துட்டேங்க. என்னுடைய ரத்தம் ஏபி+. யாருக்கு எப்ப தேவைப்பட்டாலும் அழைக்கவும்

ஒன்பது ஏழு ஒன்பது ஒன்று மூன்று ஐந்து மூன்று எட்டு ஒன்பது ஆறு

தஞ்சாவூரில் இருக்கிறேன். சுற்றுவட்டாரத்தில் எங்கு தேவைப்பட்டாலும் வந்து வாங்கிக்கொள்கிறேன் (தருகிறேன்).

Friday, December 9, 2011

என்னவோ போங்க

"விவேகம் என்னும் வெள்ளி முளைத்து சாதி மதப்பித்து என்னும் சனி தொலைந்தால்தான் சமத்துவம் என்னும் ஞாயிறு பிறக்கும்."

இதை யார் சொன்னாங்கன்னு நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. நான் சொல்ல வருவது இதிலுள்ள பிழையைப்பற்றியது. சொற்குற்றமும் உண்டு பொருள் குற்றமும் உண்டு.

விவேகம் என்னும் வெள்ளி முளைத்து சாதி மதப்பித்து என்னும் சனி தொலைந்தால்தான்…”

வெள்ளி முளைத்து சனி தொலையாது. மாறாக, வெள்ளி தொலைந்தால்தான் சனி முளைக்கும். ஒருவேளை நீங்கள் வெள்ளி முளைத்துதான் சனி தொலைகிறது என்ற ஆழ்ந்த நம்பிக்கை உடையவராகயிருந்தால், அடுத்த வரிக்கு என்ன பதில் சொல்வீர்கள்? அதாவது,

சனி தொலைந்தால்தான் சமத்துவம் என்னும் ஞாயிறு பிறக்கும்

ஆக, வெள்ளிக்கு அடுத்த சனி வரும்போது வெள்ளி முளைக்கிறதாம், சனி தொலைகிறதாம். ஆனால் அதே சனிக்கு அப்புறம் வரும் ஞாயிறு மட்டும் சனி தொலைந்து ஞாயிறு பிறக்கிறதாம்.

அப்படியென்றால் அந்த வாக்கியம் எப்படியிருந்திருக்க வேண்டும்?
"
விவேகம் என்னும் வெள்ளி தொலைந்து, சாதிமதபித்து என்னும் சனி முளைத்தால்தான், சமத்துவம் என்னும் ஞாயிறு பிறக்கும்."


அர்த்தமே மாறிவிட்டது அல்லவா?

உனக்கென்னப்பா, தப்பு கண்டுபிடிப்பது ரொம்ப சுலபம், தப்பு கண்டுபிடித்தே பெயர் வாங்கும் நக்கீரன் நீ, எங்கே உன்னால் இதை சரியாக எழுதமுடியுமா சொல் பார்க்கலாம் என்று நினைக்கிறீர்களா? சரி, வருவோம்.

"
சாதிமதபித்து என்னும் சனி தொலைந்து, சமத்துவம் என்னும் ஞாயிறு பிறந்தால்தான் மறுமலர்ச்சி என்னும் திங்கள் மலரும்"

இது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய அளவுக்கு உயர்ந்த கருத்து அல்லதான், ஓகோ என்று இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது இருக்கிறது (இருக்கிறதுதானே!!??). முதலில் சொல்லப்பட்ட வாக்கியத்திற்கும் கடைசியாக அடியேன் சொன்ன வாக்கியத்திற்கும் உள்ள குறைந்தபட்ச வித்தியாசத்தையாவது உண்ர்ந்தீர்களா?

அரசாங்கத்தில் உயர் பதிவியிலிருந்தால் நீங்கள் சொன்னதுதான் சட்டம். அதிகாரம் உங்களிடமிருந்தால் நீங்கள்தான் செம்மொழிகண்ட வள்ளுவர். நீங்கள் படைப்பதே காவியம். உங்கள் எழுத்துப்பிழைகூட நவீன இலக்கணம்தான். நமக்கு தேவை எதுகையும் மோனையும். அர்த்தம் இருக்கிறதா அல்லது வார்த்தை உபயோகத்தில் நேர்மையிருக்கிறதா என்பதெல்லாம் தேவையில்லை.

என்னங்க பண்றது? தொப்பி வச்சவனெல்லாம் டைரக்டருங்குறான். பேனாவுக்கு மை ஊத்தி கொடுத்து கையை நனைச்ச மிச்ச மையை தலையில தடவிக்கிறவன் எழுத்தாளன்றான். வீட்டுல குழம்புல உப்பு பத்தலேன்னு குழம்புசட்டியை உடைக்கிறவன் போராளின்னு பேனர் வச்சுக்குறான்.

சரி விட்டுத்தள்ளுங்க. இப்போ கிளைமாக்ஸ் காமெடியக்கேளுங்க.

நான், நீ என்று சொன்னால் உதடுகள்கூட ஒட்டாது. நாம் என்று சொன்னால்தான் உதடுகள்கூட ஒட்டும்.

புரியவில்லையா? தெளிவாக விளக்குகிறேன் கேளுங்கள்.

அழகிரி,ஸ்டாலின் என்று சொன்னால் உதடுகள்கூட ஒட்டாது. கனிமொழி என்று சொன்னால்தான் உதடுகள் கூட ஒட்டும்.

Thursday, December 8, 2011

தேடல்

"ஊசி நானாம்பா, ஊசி நானாம்" அதுவரை முணகிக்கொண்டிருந்த குழந்தை கிளினிக்கை பார்த்ததும் அழ ஆரம்பித்தது

புள்ள சாப்பிடலேன்னா டாக்டர், ஊசின்னு சொல்லி பயமுறுத்தாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் குழந்தையை சமாதானபடுத்திக்கொண்டே பதில் எதிர்பார்க்காத கேள்வி ஒன்றை எடுத்துப்போட்டார் கணவர்.

அப்டீன்னா இனிமே நீங்களே தினமும்` நிலாவை காட்டி சோறு ஊட்டிவிடுங்க இதுக்கும் மேலே அடுத்த கேள்வி அங்கேயிருந்து வரக்கூடாது என்பதாகயிருந்தது அந்த பதில்

கணவர் எதுவும் பதில் சொல்லவில்லை. சொன்னால் அது எங்கே போய்முடியும் என்று அவருக்கு தெரியும், பல மைல்களுக்கு அப்பால் ஊரில் இருக்கும் அவனுடைய அம்மாவிடம் போய்முடியும். அணுஆயுதங்களை சுமந்துகொண்டு கண்டம்விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணை ஏற்கனவே பலமுறை வெற்றிகரமாக வீட்டில் சோதித்து பார்க்கப்பட்டிருக்கிறது. வம்பை வளர்க்க விரும்பாமல் சங்கத்தை அமைதியாக கலைத்தார்.

அந்த கிளினிக்கை நடத்தும் பெண் டாக்டர் ஒரு பொதுமருத்துவர். "சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமான ஆடைகள் ஒரே இடத்தில் வாங்க" என்ற ரேடியோ விளம்பரம் போல அனைத்து வயதினரும் அந்த கிளினிக்கில் காத்திருந்தனர். ஆறுமாத கைக்குழந்தையுடன் அதன் அம்மா, அவருக்கு துணையாக இன்னொரு பெண், மூன்று வயது குழந்தையை அழைத்து வந்திருக்கும் பெற்றோர், 10 வயது சிறுவனுடன் தாய், கல்லூரி செல்லும் மகளை அழைத்து வந்திருந்த நடுத்தர வயது பெண் என எல்லா வயது பிரிவிலும் ஒன்றிரண்டு நோயாளிகள் இருக்கின்றனர்.

வந்திருப்பவர்களின் வயது மட்டுமல்ல அவர்களின் பிரச்சனைகளும் முற்றிலும் வித்தியாசமானதுதான். காய்ச்சல், ரத்தக்காயம், சர்க்கரை, மூட்டுவலி என விதவிதமான நோய்கள். வீட்டு சமையலறையில் சர்க்கரை பற்றிபேசப்படுவதைவிட மருத்துவமனைகளில்தான் அதிகம் பேசப்படுகிறது

வெளியில் டோக்கன் கொடுக்கும் பெண் நம்பர் எழுதி கொடுத்துக்கொண்டிருந்தார். நிறைய நோயாளிகளை தினமும் பார்ப்பதால் எல்லா வியாதியஸ்தர்களும் அவருக்கு ஒரே மாதிரிதான். எவ்வளவோ பாத்திருக்கோம், இத பார்க்கமாட்டோமா என்ற ரீதியில்தான் இருந்தார். வந்திருந்தவர்களின் நோயோ, குழந்தைகளின் அழுகையோ அவரை சஞ்சலப்படுத்திவில்லை.

"நமக்கு வாய்ச்சதும் சரியில்லை, கெடச்சதும் சரியில்லை" விளையாடும்போது கால் கட்டைவிரலில் அடிபட்டு ரத்தம் வந்திருக்கிற மகனை கிளினிக்கிற்கு அழைத்துவந்த ஒரு பெண்ணின் அங்கலாய்ப்பு.

அந்த சிறுவன எவ்வளவு நேரம் திட்டு வாங்கிக்கொண்டிருக்கிறானோ? ஓடாத பழங்கால கடிகாரத்திற்கு சாவி கொடுப்பதுபோல காதை ஒரு திருகு திருகினார். ப்ரைம்டைம் சீரியல் பார்க்கமுடியாமல்போன கோபமும் சேர்ந்து வந்திருக்கும். கீழே விழுந்து பட்ட அடியைவிட அம்மாவிடம் வாங்கிக்கட்டிகொண்டதுதான் அதிகம்.

ஓடி விளையாடு பாப்பா என்று சொன்ன பாரதி இதைபார்த்தால் உட்கார்ந்தே விளையாடு பாப்பா என்றுதான் பாடுவார்.

"சொலறதைக்கேட்டாத்தானே, எல்லாருடைய வீட்டிலும் புள்ளைங்க இருக்குறாங்க, இப்படியா தெனமும் உயிரை வாங்கிக்கிட்டு இருக்குறாங்க?" வீட்டிலிருந்து கிளினிக்கிற்கு வரும்வழியில் எல்லாம் திட்டும் திருகும் வாங்கிக்கொண்டே வந்து சேர்ந்தான்.

எல்லா அம்மாக்களுமே திறமையான 'திட்ட' கமிஷன் தலைவர்தான்.

பிறந்து ஆறுமாதமிருக்கும் குழந்தை அடுத்த டோக்கன்காரர், அதன் அம்மா மற்றும் பாட்டியுடன் வந்து சிணுங்கி சிணுங்கி தன் பிரசன்னத்தை வெளிப்படுத்தியது. கொழு கொழுவென்று இருத்ததால் அருகிலிருந்தவர்களின் கவனத்தை எளிதில் ஈர்த்தது.

மழலைகளை கொஞ்சுவதற்கு மட்டும் வார்த்தைகளை தேடவேண்டியதில்லை. சங்க இலக்கியத்தில் இருக்கிற புலவர்கள் பெயரை எல்லாம் வைத்தோ, செயலுக்கும் ஆளுக்கும் ஒப்பாத தானைத்தலைவரே என்றோ குழந்தைகளை கொஞ்ச வேண்டியதில்லை. கன்னத்தை மெதுவாக கிள்ளி - தங்ககட்டி, குஞ்சுமணி, குட்டிக்கழுதை, நாய்க்குட்டி, பண்டிபயலே, உச்சாப்பையா என எப்படி கூப்பிட்டாலும் பொக்கை வாயை காட்டி சிரிக்கும் குழந்தையின் சிரிப்பில் எந்த கவலையாயினும் ஒரு கணம் மறந்துபோவது உண்டு.

பத்து பேருக்கு மேல் அந்த கிளினிக்கில் காத்திருந்தாலும் யாரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. ரயில் சினேகம் மாதிரி கிளினிக் சினேகம் அவ்வளவு சுவாரசியமாக இருந்துவிடபோவதில்லை என்ற எண்ணமாககூட இருக்கலாம்

அந்த சூழ்நிலையையே அசைத்துபார்க்கிறமாதிரி நம்ம கதையின் நாயகனையும் நாயகியையும் சுமந்துகொண்டு அந்த ஆட்டோ வந்து நின்றது. ஆட்டோவின் சத்தம், காது மந்தமானவர்களையும் காதை பொத்திகொள்கிற அளவுக்கு இருந்ததால் அங்கே அமர்ந்திருந்த எல்லாரும் ஒரு நிமிடம் திரும்பிபார்த்து திரும்பவும் திரும்பிக்கொண்டார்கள்

நடுத்தரவயது பெண்மனி ஒருவர் உள்ளேயிருந்து தலையை வெளியே நீட்டி கிளினிக்கை பார்த்தார். கூட்டத்தை பார்த்தவர் இறங்கவேண்டாம் என முடிவு செய்திருப்பார் போல. ஒருவழியாக ஆட்டோவிலிருந்து கணவன் மனைவி இருவ்ரும் பொறுமையாக இறங்கினார்கள்.

"அச்சச்சோ, பார்த்துமா" ஆட்டோவை விட்டு இறங்கியவுடன் அந்தப்பெண்மணியை எதேசசையாக முதலில் பார்த்த ஒருவர் சத்தமாக சொல்ல மற்ற எல்லாரும் திரும்பி பார்த்தார்கள். தலையில் அடிபட்டு, சேலையின் ஒரு பக்கம் ரத்தம் அப்பியிருந்தது. அடிபட்ட இடத்தில் முந்தானையால் அழுத்தி பிடித்திருந்ததால், முந்தானையில் ரத்தம் அதிகம் படிந்திருந்தது. கண்கள் சிவந்திருந்தன அழுகையினால். அவரின் அந்த கோலத்தை யாரும் பார்த்து விடக்கூடாது என்றுதான் அவர் ஆட்டோவிலிருந்து இறங்குவதற்கு தயங்கியதாக தெரிந்தது. ஆட்டோவிற்குள் முகத்தை நுழைத்து ஏதோ பேச, அவரின் கணவர் ஆட்டோவிலிருந்து இறங்கினார்.

மனிதர் குடித்திருந்து, ஆனால் இப்போது முகத்தை நன்றாக கழுவி சற்று தெளிந்தவராய் தெரிந்தார். அவர் சட்டையின் ஒரு பக்கத்திலும் ரத்தம். சுற்றியிருப்பவர்கள் அவரை வெறுப்புடன் பார்ப்பதாக நினைத்து குற்ற உணர்வில் முகத்தை திருப்பிக்கொண்டார். அந்த பெண்மணி முகத்தை அழுத்தி துடைத்துக்கொண்டு அவரை உள்ளே அழைத்தார்.

உட்கார்ந்திருந்தவர்களில் இருவர் எழுந்து அவர்களுக்கு இடம் கொடுத்தனர். சேரில் உட்கார்ந்த அந்த கணவர் தலையை குனிந்துகொண்டார். குற்ற உணர்ச்சியா இல்லை அவமானமா தெரியவில்லை.

பக்கத்திலிருந்த வயதான பெண்மணி அப்பெண்ணிடம், " எப்படிம்மா அடிபட்டது?"

அவர் கேட்டதுதான் தாமதம், அந்த பெண்மணிக்கு மேலும் அழுகை வந்துவிட்டது. கேள்வி கேட்டவருக்கு தர்மசங்கடாமாய் போயிற்று. ஒருவாறு அழுகையை நிறுத்திவிட்டு "கல்யாணம் ஆகி எங்களுக்கு 15 வருஷம் ஆச்சுங்க, தினமும் குடிதான், சம்பள பணத்தையும் சரியா தர்றதில்ல, குடிச்சிட்டு வந்து தினமும் சண்டைதான், இப்ப கொஞ்ச நாளா வீட்டுக்கும் சரியா வர்றதில்ல. ஸ்கூலுக்கு போற புள்ளங்களை வச்சுக்கிட்டு நான் தனியா என்ன பண்ணமுடியும்? கேட்டா அசிங்கமா திட்டறது. நானும் ரொம்ப நாள் பொறுமையாதான் சொல்லிப்பார்த்தேன. கொஞ்சம்கூட திருந்தவேயில்ல. இன்னிக்கி புள்ளைங்களுக்கு சாப்பாடு போட்டுகிட்டு இருந்தேன், குடிச்சிட்டு வந்து சண்டைபோட்டாரு, அப்புறம்நானும் சத்தம் போட்டேன், முதலில் வாய்ச்சண்டையாத்தான் இருந்துச்சு,. அப்டியே சண்டை பெருசாயி, பக்கத்துலயிருந்த குழம்பு கரண்டிய எடுத்து ... அதற்குமேல் வார்த்தை வரவில்லை.

வாயை முந்தானையால் மூடிக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டார். இயலாமையோ வலியோ ஏதோ ஒன்று அவரை கஷ்டப்படுத்தியது. இவர் இப்படி சொன்னதும் சுற்றியிருந்தவர்கள் கணவரை மேலும் வெறுப்புடன் பார்க்கத்தொடங்கினார்கள். குற்ற உணர்ச்சி காரணமாகவோ அல்லது அவமானம் காரணமாகவோ அவரின் தலை நிமிரவேயில்லை. குனிந்த தலை நிமிராமல், கீழே விழுந்துவிட்ட ஏதோ ஒன்றை மும்முரமாக தேடுவதாக காட்டிக்கொண்டார். முன்பின் அறிமுகம் இல்லாத மனிதர்களுக்கு முன்பாக தான் ரொம்பவும் அசிங்கபடுவதாக நினைத்திருப்பார் போலும்.

அந்த வயதான பெண்மணிஏம்பா பொண்டாட்டிய இப்டி குடிச்சுட்டு வந்து அடிச்சுருக்கியே, இதேல்லாம் தப்புப்பா, உன் புள்ளைங்கள கூட நம்பமுடியாது, பொண்டாட்டிதான் கடைசிவரைக்கும் கூட வரும், குடிக்காம நல்லபடியா குடும்பம் நடத்துப்பா, என்னதான் இருந்தாலும் இப்டியா ரத்தகாயம் வர்ற அளவுக்கு அடிக்கிறது.

அந்த பெண்மணி குடிகார கணவரிடம் ரொம்ப வாஞ்சையுடன் சொல்வதை கேட்டு அழுகையை ஒரு கணம் நிறுத்திவிட்டு கணவரைப்பார்த்தாள்.

எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும் எல்லா காலத்திலும் தட்டுபாடின்றி இலவசமாக கிடைப்பது அறிவுரை ஒன்றுதான்

அவர் குனிந்த தலை நிமிரவில்லை. இன்னும் மும்முரமாய் தேடிக்கொண்டிருந்தார். பெண்கள் சிலர் தங்களுக்குள் மெதுவாக பேசிக்கொண்டனர். ஏற்கனவே உள்ளே டாக்டரிடம் சென்ற நபர் இன்னும் வெளியே வருவதாக அறிகுறியே இல்லை.

அடுத்து எங்களை உள்ளே விடேன்மா டோக்கன் கொடுக்கும் பெண்ணிடம் அந்தப்பெண் விண்ணப்பம் அளிக்க,

அடுத்த டோக்கன்காரர் அவர்தான் அவர்கிட்ட கேட்டுக்கங்க அரசாங்க அலுவலரைப்போல பொறுப்பை சாமர்த்தியமாக நகர்த்திவிட்டாள்.

" நீங்க உள்ளே போங்கம்மா, உங்களுக்கு அடுத்து நான் போய்க்கிறேன்" அடுத்த டோக்கன்காரர் பெருந்தன்மை காட்டினார்.

அவருக்கு நன்றிப்பார்வையுடன் தலையாட்டினார்

யாரிடமாவது எல்லாவற்றையும் சொல்லவேண்டும் என்று நினைத்திருப்பார் போல, அடுத்த கேள்வி யாரும் கேட்காமலே அவரே தொடர்ந்தார்.

"இன்னைக்கி ரத்தக்காயம் வர்ற அளவுக்கு நடந்திருக்கு, ரத்தம் வர்றது நிக்கிறதுக்காக காபி பவுடர் கொஞ்சம் எடுத்து காயத்துல போட்டுட்டு ஆட்டோ புடிச்சு இங்க வந்துட்டோம். நாளைக்கும் இதேமாதிரி நடந்து உயிருக்கு ஏதாவது ஒண்ணுன்னா என் புள்ளைங்க கதி? இந்த பாழாய்போன குடியில அப்படி என்னதாங்க இருக்கும்? பொண்டாட்டி புள்ளங்களைவிட சாராயம் முக்கியமா போய்டுச்சுங்களே,”.

கணவருடன் வந்திருந்த ஓரிரு பெண்கள் அவசரமாக வெளியே நின்றிருந்த தங்கள் கணவர்களை பார்க்க, அவர்கள் சொல்லிவைத்த மாதிரி வேறு எங்கோ பார்த்துக்கொண்டார்கள்.

அப்படி எல்லாம் ஒண்ணும் ஆகாதும்மா, ஏதோ குடிமயக்கத்துல அப்படி செஞ்சுட்டாரு, உன் மேல பாசம் இல்லாமயா உடனே டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டு வந்துருக்காரு? உன்மேல அக்கறை இருக்குறதாலதான், உன்னை இங்கே அழைச்சிக்கிட்டு வந்துருக்காரு, அவரு சட்டையிலேயேயும் எவ்வளவு ரத்தம் பாரு, குடி பழக்கத்தை விடறதுக்கு என்ன பண்ணனும்னு பாருஎன அவர் சொன்னதுதான் தாமதம், அந்த பெண்ணின் கணவர் உடனே தலையை நிமிர்த்தி பார்த்தார்.

இத்தனை பேர் என்னை கரிச்சு கொட்டியிருந்தாலும் எனக்கு ஆதரவாக பேசுவதற்கு ஒருத்தராவது இருக்கீங்களே என்ற மாதிரியிருந்தது அந்தப்பார்வை. அந்நேரம் கதவு திறந்து உள்ளேயிருந்து ஒருவர் வெளியே வர, இவர்களை உள்ளே செல்லுமாறு ஜாடை காட்டினாள் டோக்கன் பெண்.

அவர்கள் உள்ளே சென்ற கதவு சாத்தப்பட்ட மறுவினாடி பெண்கள் கண்டனத்தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றினார்கள். "பாவிப்பய, எப்படி அடிச்சுருக்கான் பாருங்க, குடிச்சுட்டா கண்ணு மண்ணு தெரியாமயா போய்டும், எப்படியும் தையல் போடவேண்டியிருக்கும், எவ்ளோ ரத்தம் பார்த்தீங்களா"

இந்த மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் எதுக்கு கல்யாணம், பொண்டாட்டி?” காற்றோட்டத்திற்காக குழந்தையை வெளியில் வைத்திருக்கும் தன் கணவரை பார்த்துக்கொண்டே தன் கருத்தை அவசர அவசரமாக சபையில் பதித்தார் அந்தப்பெண்மணி

"என்னதான் சண்டை போட்டிருந்தாலும், அடிபட்டு ரத்தம் வந்த உடனே டாக்டர்கிட்ட கூட்டிகிட்டு வரணும்னு தோணிருக்கு, பரவாயில்லை" காலில் அடிபட்டு வந்திருந்த மகனை டாக்டரிடம் அழைத்து செல்வதைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாத தன் கணவரைப்பற்றிய கடுப்பு இவருக்கு.

இருவரும் உள்ளே சென்று பத்து பதினைந்து நிமிடங்களாகியும் வெளியே வராததால், அதிகபட்ச பெருந்தன்மை காட்டிவிட்டோமோ அடுத்த டோக்கன்கோரர் யோசிக்கலானார்.

ஒருவழியாக கதவு திறக்கும் சத்தம் வந்தவுடன் முதல்தடவை பெண்பார்க்க வந்திருக்கும் பையனின் ஆர்வத்தில் அனைவரும் வாசல் நோக்கினர். குடிகார கணவர்தான் முதலில் வெளியே வந்தார். அவரைப்பார்த்த உடன் உட்கார்ந்திருந்தவர்களுக்கு முகத்தில் ஈ கொசு எதுவுமே ஆடவில்லை. ஆச்சர்யப்பட்டுப்போனார்கள். வெளியே வந்த அவர் தலையிலிருந்து தாடையை சுற்றி ஒரு கட்டு போடப்பட்டிருந்தது. அவருக்குபின் வெளியே வந்த அவர் மனைவியின் தலை இப்போது குனிந்து இருந்தது. வெளியே வந்த குடிகாரர் அங்கிருந்த பெண்களை ஒரு தடவை ஆழமாகப் பார்த்தார். விழாத ஏதோ ஒன்றை கீழே அவர்கள் தேட ஆரம்பித்தனர்.