Thursday, December 8, 2011

தேடல்

"ஊசி நானாம்பா, ஊசி நானாம்" அதுவரை முணகிக்கொண்டிருந்த குழந்தை கிளினிக்கை பார்த்ததும் அழ ஆரம்பித்தது

புள்ள சாப்பிடலேன்னா டாக்டர், ஊசின்னு சொல்லி பயமுறுத்தாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் குழந்தையை சமாதானபடுத்திக்கொண்டே பதில் எதிர்பார்க்காத கேள்வி ஒன்றை எடுத்துப்போட்டார் கணவர்.

அப்டீன்னா இனிமே நீங்களே தினமும்` நிலாவை காட்டி சோறு ஊட்டிவிடுங்க இதுக்கும் மேலே அடுத்த கேள்வி அங்கேயிருந்து வரக்கூடாது என்பதாகயிருந்தது அந்த பதில்

கணவர் எதுவும் பதில் சொல்லவில்லை. சொன்னால் அது எங்கே போய்முடியும் என்று அவருக்கு தெரியும், பல மைல்களுக்கு அப்பால் ஊரில் இருக்கும் அவனுடைய அம்மாவிடம் போய்முடியும். அணுஆயுதங்களை சுமந்துகொண்டு கண்டம்விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணை ஏற்கனவே பலமுறை வெற்றிகரமாக வீட்டில் சோதித்து பார்க்கப்பட்டிருக்கிறது. வம்பை வளர்க்க விரும்பாமல் சங்கத்தை அமைதியாக கலைத்தார்.

அந்த கிளினிக்கை நடத்தும் பெண் டாக்டர் ஒரு பொதுமருத்துவர். "சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமான ஆடைகள் ஒரே இடத்தில் வாங்க" என்ற ரேடியோ விளம்பரம் போல அனைத்து வயதினரும் அந்த கிளினிக்கில் காத்திருந்தனர். ஆறுமாத கைக்குழந்தையுடன் அதன் அம்மா, அவருக்கு துணையாக இன்னொரு பெண், மூன்று வயது குழந்தையை அழைத்து வந்திருக்கும் பெற்றோர், 10 வயது சிறுவனுடன் தாய், கல்லூரி செல்லும் மகளை அழைத்து வந்திருந்த நடுத்தர வயது பெண் என எல்லா வயது பிரிவிலும் ஒன்றிரண்டு நோயாளிகள் இருக்கின்றனர்.

வந்திருப்பவர்களின் வயது மட்டுமல்ல அவர்களின் பிரச்சனைகளும் முற்றிலும் வித்தியாசமானதுதான். காய்ச்சல், ரத்தக்காயம், சர்க்கரை, மூட்டுவலி என விதவிதமான நோய்கள். வீட்டு சமையலறையில் சர்க்கரை பற்றிபேசப்படுவதைவிட மருத்துவமனைகளில்தான் அதிகம் பேசப்படுகிறது

வெளியில் டோக்கன் கொடுக்கும் பெண் நம்பர் எழுதி கொடுத்துக்கொண்டிருந்தார். நிறைய நோயாளிகளை தினமும் பார்ப்பதால் எல்லா வியாதியஸ்தர்களும் அவருக்கு ஒரே மாதிரிதான். எவ்வளவோ பாத்திருக்கோம், இத பார்க்கமாட்டோமா என்ற ரீதியில்தான் இருந்தார். வந்திருந்தவர்களின் நோயோ, குழந்தைகளின் அழுகையோ அவரை சஞ்சலப்படுத்திவில்லை.

"நமக்கு வாய்ச்சதும் சரியில்லை, கெடச்சதும் சரியில்லை" விளையாடும்போது கால் கட்டைவிரலில் அடிபட்டு ரத்தம் வந்திருக்கிற மகனை கிளினிக்கிற்கு அழைத்துவந்த ஒரு பெண்ணின் அங்கலாய்ப்பு.

அந்த சிறுவன எவ்வளவு நேரம் திட்டு வாங்கிக்கொண்டிருக்கிறானோ? ஓடாத பழங்கால கடிகாரத்திற்கு சாவி கொடுப்பதுபோல காதை ஒரு திருகு திருகினார். ப்ரைம்டைம் சீரியல் பார்க்கமுடியாமல்போன கோபமும் சேர்ந்து வந்திருக்கும். கீழே விழுந்து பட்ட அடியைவிட அம்மாவிடம் வாங்கிக்கட்டிகொண்டதுதான் அதிகம்.

ஓடி விளையாடு பாப்பா என்று சொன்ன பாரதி இதைபார்த்தால் உட்கார்ந்தே விளையாடு பாப்பா என்றுதான் பாடுவார்.

"சொலறதைக்கேட்டாத்தானே, எல்லாருடைய வீட்டிலும் புள்ளைங்க இருக்குறாங்க, இப்படியா தெனமும் உயிரை வாங்கிக்கிட்டு இருக்குறாங்க?" வீட்டிலிருந்து கிளினிக்கிற்கு வரும்வழியில் எல்லாம் திட்டும் திருகும் வாங்கிக்கொண்டே வந்து சேர்ந்தான்.

எல்லா அம்மாக்களுமே திறமையான 'திட்ட' கமிஷன் தலைவர்தான்.

பிறந்து ஆறுமாதமிருக்கும் குழந்தை அடுத்த டோக்கன்காரர், அதன் அம்மா மற்றும் பாட்டியுடன் வந்து சிணுங்கி சிணுங்கி தன் பிரசன்னத்தை வெளிப்படுத்தியது. கொழு கொழுவென்று இருத்ததால் அருகிலிருந்தவர்களின் கவனத்தை எளிதில் ஈர்த்தது.

மழலைகளை கொஞ்சுவதற்கு மட்டும் வார்த்தைகளை தேடவேண்டியதில்லை. சங்க இலக்கியத்தில் இருக்கிற புலவர்கள் பெயரை எல்லாம் வைத்தோ, செயலுக்கும் ஆளுக்கும் ஒப்பாத தானைத்தலைவரே என்றோ குழந்தைகளை கொஞ்ச வேண்டியதில்லை. கன்னத்தை மெதுவாக கிள்ளி - தங்ககட்டி, குஞ்சுமணி, குட்டிக்கழுதை, நாய்க்குட்டி, பண்டிபயலே, உச்சாப்பையா என எப்படி கூப்பிட்டாலும் பொக்கை வாயை காட்டி சிரிக்கும் குழந்தையின் சிரிப்பில் எந்த கவலையாயினும் ஒரு கணம் மறந்துபோவது உண்டு.

பத்து பேருக்கு மேல் அந்த கிளினிக்கில் காத்திருந்தாலும் யாரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. ரயில் சினேகம் மாதிரி கிளினிக் சினேகம் அவ்வளவு சுவாரசியமாக இருந்துவிடபோவதில்லை என்ற எண்ணமாககூட இருக்கலாம்

அந்த சூழ்நிலையையே அசைத்துபார்க்கிறமாதிரி நம்ம கதையின் நாயகனையும் நாயகியையும் சுமந்துகொண்டு அந்த ஆட்டோ வந்து நின்றது. ஆட்டோவின் சத்தம், காது மந்தமானவர்களையும் காதை பொத்திகொள்கிற அளவுக்கு இருந்ததால் அங்கே அமர்ந்திருந்த எல்லாரும் ஒரு நிமிடம் திரும்பிபார்த்து திரும்பவும் திரும்பிக்கொண்டார்கள்

நடுத்தரவயது பெண்மனி ஒருவர் உள்ளேயிருந்து தலையை வெளியே நீட்டி கிளினிக்கை பார்த்தார். கூட்டத்தை பார்த்தவர் இறங்கவேண்டாம் என முடிவு செய்திருப்பார் போல. ஒருவழியாக ஆட்டோவிலிருந்து கணவன் மனைவி இருவ்ரும் பொறுமையாக இறங்கினார்கள்.

"அச்சச்சோ, பார்த்துமா" ஆட்டோவை விட்டு இறங்கியவுடன் அந்தப்பெண்மணியை எதேசசையாக முதலில் பார்த்த ஒருவர் சத்தமாக சொல்ல மற்ற எல்லாரும் திரும்பி பார்த்தார்கள். தலையில் அடிபட்டு, சேலையின் ஒரு பக்கம் ரத்தம் அப்பியிருந்தது. அடிபட்ட இடத்தில் முந்தானையால் அழுத்தி பிடித்திருந்ததால், முந்தானையில் ரத்தம் அதிகம் படிந்திருந்தது. கண்கள் சிவந்திருந்தன அழுகையினால். அவரின் அந்த கோலத்தை யாரும் பார்த்து விடக்கூடாது என்றுதான் அவர் ஆட்டோவிலிருந்து இறங்குவதற்கு தயங்கியதாக தெரிந்தது. ஆட்டோவிற்குள் முகத்தை நுழைத்து ஏதோ பேச, அவரின் கணவர் ஆட்டோவிலிருந்து இறங்கினார்.

மனிதர் குடித்திருந்து, ஆனால் இப்போது முகத்தை நன்றாக கழுவி சற்று தெளிந்தவராய் தெரிந்தார். அவர் சட்டையின் ஒரு பக்கத்திலும் ரத்தம். சுற்றியிருப்பவர்கள் அவரை வெறுப்புடன் பார்ப்பதாக நினைத்து குற்ற உணர்வில் முகத்தை திருப்பிக்கொண்டார். அந்த பெண்மணி முகத்தை அழுத்தி துடைத்துக்கொண்டு அவரை உள்ளே அழைத்தார்.

உட்கார்ந்திருந்தவர்களில் இருவர் எழுந்து அவர்களுக்கு இடம் கொடுத்தனர். சேரில் உட்கார்ந்த அந்த கணவர் தலையை குனிந்துகொண்டார். குற்ற உணர்ச்சியா இல்லை அவமானமா தெரியவில்லை.

பக்கத்திலிருந்த வயதான பெண்மணி அப்பெண்ணிடம், " எப்படிம்மா அடிபட்டது?"

அவர் கேட்டதுதான் தாமதம், அந்த பெண்மணிக்கு மேலும் அழுகை வந்துவிட்டது. கேள்வி கேட்டவருக்கு தர்மசங்கடாமாய் போயிற்று. ஒருவாறு அழுகையை நிறுத்திவிட்டு "கல்யாணம் ஆகி எங்களுக்கு 15 வருஷம் ஆச்சுங்க, தினமும் குடிதான், சம்பள பணத்தையும் சரியா தர்றதில்ல, குடிச்சிட்டு வந்து தினமும் சண்டைதான், இப்ப கொஞ்ச நாளா வீட்டுக்கும் சரியா வர்றதில்ல. ஸ்கூலுக்கு போற புள்ளங்களை வச்சுக்கிட்டு நான் தனியா என்ன பண்ணமுடியும்? கேட்டா அசிங்கமா திட்டறது. நானும் ரொம்ப நாள் பொறுமையாதான் சொல்லிப்பார்த்தேன. கொஞ்சம்கூட திருந்தவேயில்ல. இன்னிக்கி புள்ளைங்களுக்கு சாப்பாடு போட்டுகிட்டு இருந்தேன், குடிச்சிட்டு வந்து சண்டைபோட்டாரு, அப்புறம்நானும் சத்தம் போட்டேன், முதலில் வாய்ச்சண்டையாத்தான் இருந்துச்சு,. அப்டியே சண்டை பெருசாயி, பக்கத்துலயிருந்த குழம்பு கரண்டிய எடுத்து ... அதற்குமேல் வார்த்தை வரவில்லை.

வாயை முந்தானையால் மூடிக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டார். இயலாமையோ வலியோ ஏதோ ஒன்று அவரை கஷ்டப்படுத்தியது. இவர் இப்படி சொன்னதும் சுற்றியிருந்தவர்கள் கணவரை மேலும் வெறுப்புடன் பார்க்கத்தொடங்கினார்கள். குற்ற உணர்ச்சி காரணமாகவோ அல்லது அவமானம் காரணமாகவோ அவரின் தலை நிமிரவேயில்லை. குனிந்த தலை நிமிராமல், கீழே விழுந்துவிட்ட ஏதோ ஒன்றை மும்முரமாக தேடுவதாக காட்டிக்கொண்டார். முன்பின் அறிமுகம் இல்லாத மனிதர்களுக்கு முன்பாக தான் ரொம்பவும் அசிங்கபடுவதாக நினைத்திருப்பார் போலும்.

அந்த வயதான பெண்மணிஏம்பா பொண்டாட்டிய இப்டி குடிச்சுட்டு வந்து அடிச்சுருக்கியே, இதேல்லாம் தப்புப்பா, உன் புள்ளைங்கள கூட நம்பமுடியாது, பொண்டாட்டிதான் கடைசிவரைக்கும் கூட வரும், குடிக்காம நல்லபடியா குடும்பம் நடத்துப்பா, என்னதான் இருந்தாலும் இப்டியா ரத்தகாயம் வர்ற அளவுக்கு அடிக்கிறது.

அந்த பெண்மணி குடிகார கணவரிடம் ரொம்ப வாஞ்சையுடன் சொல்வதை கேட்டு அழுகையை ஒரு கணம் நிறுத்திவிட்டு கணவரைப்பார்த்தாள்.

எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும் எல்லா காலத்திலும் தட்டுபாடின்றி இலவசமாக கிடைப்பது அறிவுரை ஒன்றுதான்

அவர் குனிந்த தலை நிமிரவில்லை. இன்னும் மும்முரமாய் தேடிக்கொண்டிருந்தார். பெண்கள் சிலர் தங்களுக்குள் மெதுவாக பேசிக்கொண்டனர். ஏற்கனவே உள்ளே டாக்டரிடம் சென்ற நபர் இன்னும் வெளியே வருவதாக அறிகுறியே இல்லை.

அடுத்து எங்களை உள்ளே விடேன்மா டோக்கன் கொடுக்கும் பெண்ணிடம் அந்தப்பெண் விண்ணப்பம் அளிக்க,

அடுத்த டோக்கன்காரர் அவர்தான் அவர்கிட்ட கேட்டுக்கங்க அரசாங்க அலுவலரைப்போல பொறுப்பை சாமர்த்தியமாக நகர்த்திவிட்டாள்.

" நீங்க உள்ளே போங்கம்மா, உங்களுக்கு அடுத்து நான் போய்க்கிறேன்" அடுத்த டோக்கன்காரர் பெருந்தன்மை காட்டினார்.

அவருக்கு நன்றிப்பார்வையுடன் தலையாட்டினார்

யாரிடமாவது எல்லாவற்றையும் சொல்லவேண்டும் என்று நினைத்திருப்பார் போல, அடுத்த கேள்வி யாரும் கேட்காமலே அவரே தொடர்ந்தார்.

"இன்னைக்கி ரத்தக்காயம் வர்ற அளவுக்கு நடந்திருக்கு, ரத்தம் வர்றது நிக்கிறதுக்காக காபி பவுடர் கொஞ்சம் எடுத்து காயத்துல போட்டுட்டு ஆட்டோ புடிச்சு இங்க வந்துட்டோம். நாளைக்கும் இதேமாதிரி நடந்து உயிருக்கு ஏதாவது ஒண்ணுன்னா என் புள்ளைங்க கதி? இந்த பாழாய்போன குடியில அப்படி என்னதாங்க இருக்கும்? பொண்டாட்டி புள்ளங்களைவிட சாராயம் முக்கியமா போய்டுச்சுங்களே,”.

கணவருடன் வந்திருந்த ஓரிரு பெண்கள் அவசரமாக வெளியே நின்றிருந்த தங்கள் கணவர்களை பார்க்க, அவர்கள் சொல்லிவைத்த மாதிரி வேறு எங்கோ பார்த்துக்கொண்டார்கள்.

அப்படி எல்லாம் ஒண்ணும் ஆகாதும்மா, ஏதோ குடிமயக்கத்துல அப்படி செஞ்சுட்டாரு, உன் மேல பாசம் இல்லாமயா உடனே டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டு வந்துருக்காரு? உன்மேல அக்கறை இருக்குறதாலதான், உன்னை இங்கே அழைச்சிக்கிட்டு வந்துருக்காரு, அவரு சட்டையிலேயேயும் எவ்வளவு ரத்தம் பாரு, குடி பழக்கத்தை விடறதுக்கு என்ன பண்ணனும்னு பாருஎன அவர் சொன்னதுதான் தாமதம், அந்த பெண்ணின் கணவர் உடனே தலையை நிமிர்த்தி பார்த்தார்.

இத்தனை பேர் என்னை கரிச்சு கொட்டியிருந்தாலும் எனக்கு ஆதரவாக பேசுவதற்கு ஒருத்தராவது இருக்கீங்களே என்ற மாதிரியிருந்தது அந்தப்பார்வை. அந்நேரம் கதவு திறந்து உள்ளேயிருந்து ஒருவர் வெளியே வர, இவர்களை உள்ளே செல்லுமாறு ஜாடை காட்டினாள் டோக்கன் பெண்.

அவர்கள் உள்ளே சென்ற கதவு சாத்தப்பட்ட மறுவினாடி பெண்கள் கண்டனத்தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றினார்கள். "பாவிப்பய, எப்படி அடிச்சுருக்கான் பாருங்க, குடிச்சுட்டா கண்ணு மண்ணு தெரியாமயா போய்டும், எப்படியும் தையல் போடவேண்டியிருக்கும், எவ்ளோ ரத்தம் பார்த்தீங்களா"

இந்த மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் எதுக்கு கல்யாணம், பொண்டாட்டி?” காற்றோட்டத்திற்காக குழந்தையை வெளியில் வைத்திருக்கும் தன் கணவரை பார்த்துக்கொண்டே தன் கருத்தை அவசர அவசரமாக சபையில் பதித்தார் அந்தப்பெண்மணி

"என்னதான் சண்டை போட்டிருந்தாலும், அடிபட்டு ரத்தம் வந்த உடனே டாக்டர்கிட்ட கூட்டிகிட்டு வரணும்னு தோணிருக்கு, பரவாயில்லை" காலில் அடிபட்டு வந்திருந்த மகனை டாக்டரிடம் அழைத்து செல்வதைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாத தன் கணவரைப்பற்றிய கடுப்பு இவருக்கு.

இருவரும் உள்ளே சென்று பத்து பதினைந்து நிமிடங்களாகியும் வெளியே வராததால், அதிகபட்ச பெருந்தன்மை காட்டிவிட்டோமோ அடுத்த டோக்கன்கோரர் யோசிக்கலானார்.

ஒருவழியாக கதவு திறக்கும் சத்தம் வந்தவுடன் முதல்தடவை பெண்பார்க்க வந்திருக்கும் பையனின் ஆர்வத்தில் அனைவரும் வாசல் நோக்கினர். குடிகார கணவர்தான் முதலில் வெளியே வந்தார். அவரைப்பார்த்த உடன் உட்கார்ந்திருந்தவர்களுக்கு முகத்தில் ஈ கொசு எதுவுமே ஆடவில்லை. ஆச்சர்யப்பட்டுப்போனார்கள். வெளியே வந்த அவர் தலையிலிருந்து தாடையை சுற்றி ஒரு கட்டு போடப்பட்டிருந்தது. அவருக்குபின் வெளியே வந்த அவர் மனைவியின் தலை இப்போது குனிந்து இருந்தது. வெளியே வந்த குடிகாரர் அங்கிருந்த பெண்களை ஒரு தடவை ஆழமாகப் பார்த்தார். விழாத ஏதோ ஒன்றை கீழே அவர்கள் தேட ஆரம்பித்தனர்.

5 comments:

  1. என்னுடைய இந்த முதல் கதையை ( நெசமாதாங்க, கதைதான், நம்புங்க) பாராட்டியோ திட்டியோ விமர்சித்தோ கருத்து பதிவோருக்கு பரிசு வழங்கப்படும். அபினய சரஸ்வதி, நம்ம கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி ஆலயமணி படத்துல் யூஸ் பண்ணின சோப்பு டப்பா உடனே அனுப்பி வைக்கப்படும். உங்கள் பரிசுக்கு உடனே முந்துங்கள்.

    ReplyDelete
  2. சங்க இலக்கியத்தில் இருக்கிற புலவர்கள் பெயரை எல்லாம் வைத்தோ, செயலுக்கும் ஆளுக்கும் ஒப்பாத தானைத்தலைவரே என்றோ குழந்தைகளை கொஞ்ச வேண்டியதில்லை. கன்னத்தை மெதுவாக கிள்ளி - தங்ககட்டி, குஞ்சுமணி, குட்டிக்கழுதை, நாய்க்குட்டி, பண்டிபயலே, உச்சாப்பையா என எப்படி கூப்பிட்டாலும் பொக்கை வாயை காட்டி சிரிக்கும் குழந்தையின் சிரிப்பில் எந்த கவலையாயினும் ஒரு கணம் மறந்துபோவது உண்டு.

    Very good! I like this sentence...

    ReplyDelete
  3. @ராஜா

    நெசமாத்தான் சொல்றீங்களா? எப்படியோ, உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. "எல்லா அம்மாக்களுமே திறமையான 'திட்ட' கமிஷன் தலைவர்தான்." அதனால்தான், அப்பா எனும் முதல் மந்திரி, குடும்பம் எனும் நாட்டை ஆள முடிகிறது...!

    பின் குறிப்பு:-
    இந்த கதையை நீங்கள் இணையத்தில் பதியும் முன் படித்த விமர்சகர்களில் நானும் ஒருவன்.

    ReplyDelete