Wednesday, December 21, 2011

அகில இந்திய பேரரசு - ஹரி ரசிகர்கள் மன்றம்

இவுங்களுக்குத்தான் ரசிகர் மன்றம் இல்லாம இருந்துச்சி, அதையும் நடத்திட்டாய்ங்களா என்று நினைக்காதீர்கள். இயக்குனர் பேரரசு, ஹரி போன்ற இயக்குனர்களைப்பற்றி தமிழ் சினிமா உலகில் ஒரு மோசமான பெயர் அதிமேதாவிகளால் ஏகபோகமாக ஏளனமாக பரப்பப்பட்டு வருகிறது. ஒரு மோசமான படத்தைப்பற்றி விமர்சிப்பதற்கு இந்த மாதிரியான இயக்குனர்களின் படங்கள் மேற்கோள் காட்டப்பட்டு மட்டம்தட்டப்படுகின்றன.

இந்த மாதிரி இயக்குனர்களின் படைப்பும் மதிக்கப்படவேண்டும். பிற படங்களில் வேலை செய்யாவிட்டாலும் அந்தப்படங்களின் வெற்றிக்கு இந்த ஸோ-கால்டு மசாலா இயக்குனர்களும் ஒருவிதத்தில் காரணமாகிறார்கள். நீங்கள் தியேட்டருக்கு படம் பார்க்கபோகிறீர்கள். அங்கே மைனா, மைதானம், தென்மேற்கு பருவகாற்று, நான் கடவுள், செங்கடல் மாதிரியான படங்கள்தான் ஓடுகின்றன என்று வைத்துக்கொள்வோம். இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து அதிலும் சில நொட்டைகள் சொல்லிவிட்டு வருவோம். அடுத்த வாரம் மறுபடியும் தியேட்டருக்கு போகிறீர்கள். அதுசமயம் சுப்ரமணியபுரம், காதல், எங்கேயும் எப்போதும் மாதிரியான சீரியஸான கதையம்சம் உள்ள படங்கள் ஓடுகின்றன. வேறு வழியில்லாமல் அதையும் பார்த்து தொலைத்துவிட்டு வருகிறீர்கள். இன்னும் ஒரு வாரத்தில் வேறு வழியே இல்லாமல் திரும்பவும் தியேட்டருக்கு செல்கிறீர்கள். அப்பவும் இதே மாதிரியான படங்களே ஓடிக்கொண்டிருந்தால் என்னாவது?

மலையாள சினிமா ஒருகாலத்தில் இதே மாதிரிதான் பெரும்பாலும் கதைக்காவே ஓடிக்கொண்டிருந்தன. அவர்களும் ரொம்ப பொறுமையாக இருந்தார்கள். ஒருகட்டத்தில் கதைவேட்கை போரடிக்க ஆரம்பித்த நேரத்தில் ஷகிலாவின் சதை அவர்களை கட்டிப்போட்டது. மலையாள சூப்பர்ஸ்டார்கள் ஷகிலாவை மிரட்டி விரட்டவேண்டிய அளவுக்கு போய்விட்டது.

மலையாள சினிமாவுக்கு அப்படிப்பட்ட ஒரு சோதனை வந்ததற்கு ஷகிலா எந்தவிதத்திலும் காரணமில்லை. லட்டு பிடிக்குமென்றால் ஆசைக்கு நான்கைந்து சாப்பிடலாம். ஆனால் அதுவே மூன்று வேளைக்கும் உணவாகும்பட்சத்தில் அந்த இனிப்பு வெகுவிரைவில் கசக்க ஆரம்பித்துவிடும். மேட்டருக்கு வருகிறேன்.

மலையாள தெலுங்கு சினிமா உலகங்கள் தமிழ்சினிமாக்களுக்கு அவுங்க அவுங்க ஏரியாவில் முடிந்தவரை தடைபோட முயற்சிக்கிறார்கள். ஆனால் நாம் நம்ம ஊரிலேயே நம்ம ஆட்களை கலாய்க்கிறோம். டி.ஆர்., பேரரசு, ஹரி, கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.ஜே.சூர்யா, விக்ரமன் போன்றோரின் பங்களிப்பு இல்லாமல் எல்லாமே சைவ திரைப்படங்களாக்வே இருந்திருந்தால்? கற்பனை செய்துபாருங்கள்.

நம்ம ஊர்லயும் எல்லா படங்களும் சீரியஸாகவே போய்கொண்டிருந்தால் அது நல்லதே அல்ல. ஒரு சமயத்தில் எல்லாவிதமான படங்களும் வருவதுதான் நல்லது. ஏனெனில் கதைக்காக யாரும் சினிமா பார்க்கவருவதில்லை. 99% பேர் பொழுதுபோக்கிற்காகத்தான் வருகிறார்கள்.அதிலும் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். எனவே அவர்களை மையப்படுத்திதான் எடுக்க முடியும். சினிமா மூலம் குடும்ப உறவுகளின் மேன்மையையோ அல்லது சமூக விழிப்புணர்வு படங்களையோ தந்து போட்ட காசை எடுக்கமுடியாது. இப்படி சொல்வதால் இனிமேல் படம் எடுக்கும் எல்லாருமே அயிட்டம் பாட்டில் ஆரம்பித்து குத்துப்பாட்டில் முடிக்கச்சொல்லி கேட்கவில்லை. ஆனால் இவை இல்லாமல் எல்லா படங்களும் சீரியஸாக வர ஆரம்பித்தால் திருட்டு விசிடியில் கூட பிறகு படம் பார்க்கமாட்டார்கள்.

சமீபத்தில் வெளியான படங்களில் சிங்கம்தான் மிக அதிக வசூலைத்தந்தது. எந்திரன், ஏழாம் அறிவு எல்லாமும் கூட அதிக வசூலைத்தந்திருக்கலாம். ஆனால் ஒரு படத்திற்கு ஆகும் செல்வையும் அது திரும்ப கொடுக்கும் வசூலையும் வைத்துபார்க்கும்போது ஏழாம் அறிவை விட சிங்கம் மிகப்பெரிய வெற்றி. சிறந்த விமர்சனங்களைபெற்ற மைனாவோ அல்லது சுப்ரமணியபுரமோ பெற்ற வெற்றியைவிட சிங்கம் பெற்ற வெற்றி பெரியது. படம் பார்க்க வருகிறவர்களுக்கு தேவை பொழுதுபோக்கு. அவர்களை திருப்தி செய்து அனுப்புவதே இயக்குனரின் முதல் கடமையாகும். விமர்சகர்களை மனதில் வைத்து படம் எடுத்தால் முதுகில் செல்லமாக தட்டி கொடுப்பார்கள். ஆனால் தலையில் விழுந்திருக்கும் துண்டு தரும் வலி அவர்களால் உணரமுடியாது.

பேரரசு படங்களில் வரும் காமெடி காட்சிகளை திறந்த மனதுடன் பாருங்கள் காமெடி பகுதி மிகவும் நன்றாகயிருக்கும். (ஆனால் பேரரசு ஸ்லோ மோஷனில் நடந்துவரும் காட்சியின்போது தயவுசெய்து சிறுவர்கள், கர்ப்பிணிபெண்கள், இருதய பலகீனமுள்ளவர்கள், வயதானோரை பக்கத்தில் வைத்துக்கொள்ளாதீர்கள்). சரிந்து விழுந்த நடிகர் விஜயின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியதே திருப்பாச்சிதான். எனவே இந்த மாதிரியான இயக்குனர்களின் படைப்பை கிண்டலுக்குள்ளாக்காதீர்கள்.

இவர்கள் படைப்பு இப்படித்தான் இருக்கும் என்ற பொது அறிவோடு செல்லுங்கள். பாலா படத்திற்கும், பேரரசு படத்திற்கும், சங்கர் படத்திற்கும், மணிரத்னம் படத்திற்கும் உள்ள வேறுபாட்டை முதலிலேயே தெரிந்துகொண்டு அதிக எதிர்பார்ப்பில்லாமல் போய் வாருங்கள். வித்தியாசத்தை உணர்வீர்கள். கட்டுரைக்கு கிளைமாக்ஸ் நெருங்கிவிட்டது. எனவெ முக்கியமான பகுதியை சொல்லி முடிக்கிறேன். நான் ஆரம்பிக்கப்போகும் அடுத்த ரசிகர்மன்றத்திற்கு எங்கள் பவர்ஸ்டார் டாக்டர் சீனிவாசன் அவர்களை மேடைக்கு வருமாறு அழைக்கிறேன்.

3 comments:

  1. தல" அவங்களை கலாய்க்க கூடாது 'ன்னு சொல்லிட்டு நீங்களே கலாய்க்கலாமா? //(ஆனால் பேரரசு ஸ்லோ மோஷனில் நடந்துவரும் காட்சியின்போது தயவுசெய்து சிறுவர்கள், கர்ப்பிணிபெண்கள், வயதானோரை பக்கத்தில் வைத்துக்கொள்ளாதீர்கள்)// இந்த இடத்தில் விழுந்து விழுந்து சிரித்தேன்... தல நான் இந்த industry (ப்ளாக்) க்கு புதுசு ஆதரவு கொடுங்க.

    ReplyDelete
  2. கருணைப்பிரியன்
    வாங்க, வாங்க. தமிழ்சினிமா இயக்குனர்கள் மாதிரி நாமளும் மொக்கையா எழுதுறோமோன்னு நெனச்சு வெம்பி போயிருந்தேன். பெயருக்கேத்த மாதிரி கருணையுள்ளத்தோட என்னோட பிளாக்குக்கு வந்து என்னை பாராட்டின உங்களுக்கு ரொம்ப நன்றி. நானும் பிளாக் உலகுக்கு புதுசுதான். தட்டுதடுமாறி இப்பதான் நாலு எழுதி முடிச்சுருக்கேன். பிற திரட்டிகள்ல பிளாக்கை எப்படி இணைக்கிறதுனு ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் கண்டுபுடிச்சேன். வாங்க சேர்ந்து பிளாக்குவோம்.

    ReplyDelete
  3. கருணைப்பிரியன்

    நண்பரே, அந்த இயக்குனர்களோட படங்களை பொத்தாம்பொதுவா மசாலாபடம்னு ஒதுக்கி வச்சிடக்கூடாதுங்கிறதுதான் என்னோட கட்டுரையின் நோக்கம். மத்தபடி, இந்த மாதிரி ஸ்லோமோஷன்ல நடந்துவர்றத பாத்துட்டு இந்திய இறையாண்மைக்கு பங்கம் வந்திடுமே என்ற பயம் கொஞ்சம்கூட இல்லாம பேரரசு நடிக்க ஆரம்பித்துவிட்டால் என்னாவது? அவர்களின் படைப்புகளுக்கு மரியாதை கொடுக்கணும், ஆனா அதையே அட்வான்டேஜா எடுத்துகிட்டு நடிக்க ஆரம்பிச்சு, மன்றம் ஆரம்பிச்சு, கட்சி ஆரம்பிக்கலாம்னு நெனைச்சா அதையும் கிண்டி கிழங்கெடுத்துடமாட்டோம்

    ReplyDelete