Monday, December 19, 2011

பழசுக்கு பதிலா புத்தம் புதுசு அதுவும் இலவசமாக

நெருங்கின நண்பனுக்கு இருதய அறுவைசிகிச்சைக்காக ரத்தம் தேவைப்பட்டபோது தொடைநடுங்கி பின்வாங்கிய நண்பர்களை அருகிலிருந்து கண்டிருக்கிறேன். ஆனால் எனக்குத்தெரிந்த வேறுசில நண்பர்கள் ரத்ததானம் கொடுப்பதை ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடு செய்கின்றனர். அதை அர்ப்பணிப்பு என்றுகூட சொல்லமுடியாது, அவர்களுக்கு அது ஒரு சுகமான சுமை. அவர்களுக்கு அது ஒரு விருப்பமான கடமை.

யார் அதிகம் முறை ரத்தம் கொடுத்தது என்பது போன்ற ஆரோக்யமான போட்டிகூட உண்டு அவர்களுக்குள். வீரியமுள்ள விதையிலிருந்து பிறந்தவர்கள். இத்தனை தடவை ரத்தம் கொடுத்தேன் என்று அவர்கள் பெருமை பீற்றிக்கொள்ளும்போது அவர்களைவிட குறைவானதடவை எண்ணிக்கை கொண்டிருந்த எனக்கு அவமானமாகப்போனதுண்டு. தமிழ் ஸ்டுடியோ இணையத்தின் நிறுவனர் நண்பர் அருண் போன்றோர் இந்த விஷயத்தில் எனக்கு மிகவும் சீனியர். பலதடவை புது ரத்தம் வாங்கியிருக்கிறார். வாங்கியிருக்கிறார் என்றவுடன் அவருக்கு ஏதோ நோவு, அதனால் ரத்தம் பெற்றார் என நினைக்காதீர்கள். அவர் பிறருக்காக ரத்தம் கொடுக்க கொடுக்க அவருடைய உடலில் புது ரத்தம் பாய்ச்சப்படுகிறதல்லவா, அதைச்சொன்னேன்.

ரத்ததானம் என்ற வார்த்தையே ஏதோ புனிதர்கள் ரேஞ்சுக்கு எடுத்துசெல்வதாகபடுகிறது. ரத்தம் கொடுக்கப்போனேன் என்று சொல்லும்போது நீங்கள் யாருக்கோ தருவதாக நினைத்துக்கொண்டு போகவேண்டாம். இருக்கிற பழைய பொருளை கொடுத்துவிட்டு வேறொரு சுத்தமான புதிய பொருளை இனாமாக வாங்கிவருவதாக நினைத்துக்கொள்வோம். எண்சாண் உடம்புக்குள் திரும்ப திரும்ப சுத்திகரிக்கப்பட்டு திரும்ப திரும்ப ஓடி அலைகிற ரத்தத்தை வேறு சுற்றுலா தளங்களுக்கு அழைத்துச்செல்வோமே? ஒரே உடம்பை ஆயுள் முழுவதும் சுற்றிவருவதற்கு ரத்தத்திற்கும் போர் அடிக்குமில்லையா? ரத்தம் கொடுப்பதினால் நாம் இழப்பது லிட்டருக்கும் குறைவான ரத்தமே. ஆனால் பெறுவது நிறைய. புதிய எனர்ஜெடிக்கான ரத்தம், ஒரு உயிரை காப்பாற்றிய புண்ணியம் முதல் குளுக்கோஸ் பாக்கெட் வரை.

சொல்ல மறந்துட்டேங்க. என்னுடைய ரத்தம் ஏபி+. யாருக்கு எப்ப தேவைப்பட்டாலும் அழைக்கவும்

ஒன்பது ஏழு ஒன்பது ஒன்று மூன்று ஐந்து மூன்று எட்டு ஒன்பது ஆறு

தஞ்சாவூரில் இருக்கிறேன். சுற்றுவட்டாரத்தில் எங்கு தேவைப்பட்டாலும் வந்து வாங்கிக்கொள்கிறேன் (தருகிறேன்).

No comments:

Post a Comment