Thursday, January 19, 2012

நீங்களா இருந்தா என்ன பண்ணுவீங்க?

ஏதாவது ஒரு திரைப்படம் பார்த்து அந்தப்படத்தில் உங்களுக்கு விருப்பமில்லாத அல்லது உங்கள் கருத்துக்கு ஒவ்வாத ஒரு காட்சியையோ அல்லது கதையின் போக்கையோ மாற்ற விரும்பினால், எந்தப்படத்தில் என்ன காட்சியை மாற்றுவீர்கள் அல்லது என்ன மாறுதலை உண்டாக்குவீர்கள்?

எந்திரன் படத்தில் இயந்திரமாக வரும் ரஜினி ஐஸ்வர்யாவை விரும்பும். அதற்கு தடையாக இருக்கும் தன் எஜமானன் விஞ்ஞானி-ரஜினிக்கு தொல்லைதர ஆரம்பிக்கும். அந்தப்படத்தின் கதையை அப்படி கொண்டுசெல்லாமல், எந்திர-ரஜினிக்கு ஐஸ்வர்யாவைபிடித்துப்போய்விட்ட காரணத்தினால், ஐஸ்வர்யாவைப்போலவே வேறொரு எந்திரத்தை அதாவது எந்திர-ஐஸ்வர்யாவை உருவாக்கி எந்திர-ரஜினியும் எந்திர-ஐஸ்வர்யாவும் லவ்வுவதாக கதையை மாற்றியிருக்கலாம்.

விஞ்ஞானி-ரஜினியைப்போலவே அச்சு அசலாக எந்திர-ரஜினியை கதைக்குள் கொண்டுவரமுடியும்போது எந்திர-ஐஸ்வர்யாவையும் கொண்டுவந்திருக்கமுடியும். இடைவேளையின்போது எந்திர-ரஜினி ஐஸ்வர்யா ஒரு ஜோடியும், விஞ்ஞானி ரஜினியும் அவரது காதலி ஒரு ஜோடியுமாக ஒரு சூப்பர் டூயட் பாடலை வைத்திருக்கலாம். இடைவேளையிலேயே இவர்கள் சேர்வதாக காட்டிவிட்டு அதன்பிறகு கதையை எப்படி கொண்டு சென்றிருக்கமுடியும்?

இருக்கவே இருக்கு, ஷங்கரின் ஃபேவரிட் கருப்புபண விவகாரம். எந்திரஜோடிகளான ரஜினியும் ஐஸ்வர்யாவும் சுவர்ட்ஸர்லாந்து, ஜெர்மனி, போன்ற பிற நாடுகளில் உள்ள கருப்புப்பணத்தை கண்டுபிடிப்பதாகவும், அதற்கு வில்லன் எந்திரன் இடைஞ்சல் செய்வதுபோலவும் கொண்டு சென்றிருக்கலாம் என்பது என் சிற்றறிவுக்கு தோன்றுகிறது. போயும் போயும் ஒரு பெண்ணுக்காக அந்த எந்திரம் அவ்வளவு சாகசங்களையும் செய்வதாக படத்தில் வருவதை அவ்வளவாக லயித்துப்பார்க்கமுடியவில்லை.

அதே மாதிரி, இயற்கை படமும். அந்தப்படத்தில் கிளைமாக்ஸ் தவிர மற்ற அனைத்துமே சிறப்பம்சம். கிளைமாக்ஸ் காட்சியில் எனக்கு உடன்பாடில்லை. கிளைமாக்ஸ் காட்சியில் காதலி அவளுடைய பழைய காதலனை நீண்ட நாட்களுக்குப்பிறகு சந்திக்க நேர்ந்தவுடன் ஷாம் பெருந்தன்மையுடன் ஊரைகாலிசெய்துவிட்டு செல்வதாக முடியும். ஆனால் வேறு மாதிரி யோசித்திருக்கலாம் எனக்குப்படுகிறது.

அவளுடைய முன்னாள் இன்னாள் காதலர்கள் இருவருமே கப்பலில் வேலை செய்பவர்களாக காட்டியிருப்பதால், கிளைமாக்ஸ் காட்சியில் அந்த இருவரில் யாராவது ஒருவர் பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுப்பதாகவும், ஆனால் அப்படி விட்டுக்கொடுக்கும் நபர் யாரென்று பார்வையாளர்களுக்கு வெளிப்படையாக தெரியாமல் அவர்களின் ஊகத்திற்கே விட்டுவிடும்படியாகவும் அமைத்திருக்கலம். அதாவது கிளைமாக்ஸ் காட்சியில் அருண்விஜய்யும் குட்டி ராதிகாவும் சேர்வதாக காட்சியை அமைத்திருந்ததை விட்டுவிட்டு, குட்டி ராதிகா அந்த இருவரில் யாரோ ஒருவனோடு சேர்ந்ததாகவும், பெருந்தன்மையுடன் அவளைப்பிரிந்துசென்ற அந்த இருவரில் ஒருவன் யாரென்பதை விஷுவலில் காட்டாமல் அதனை பார்வையாளர்களின் முடிவுக்கே விட்டுவிட்டிருந்தால் நல்ல ட்விஸ்டாயிருந்திருக்கும். ஃப்ராங்க் ஸ்டாக்டன் எழுதிய 'த லேடி ஆர் த டைகர்' சிறுகதையில் வருவதைபோல கிளைமாக்ஸ் காட்சியை அமைத்திருந்தால் நன்றாகயிருந்திருக்கும் என்பது என் கருத்து.

அதே மாதிரி ஆனந்த தொல்லை படத்தில் ஒரு மாற்றம் செய்தால் நன்றாகயிருக்கும் என நம்புகிறேன். படம் ஆரம்பித்த உடன் டைட்டில் கார்டு ஓடி முடித்தவுடன் பவர்ஸ்டார் சீனிவாசன் அவர்கள் திரையில் தோன்றி வணக்கம் வைத்தவுடன் 'நன்றி' என என்ட்கார்ட் போட்டால் பிரமாதமாயிருக்கும். மூன்றே நிமிடத்தில் படம் முடிந்திருக்கும். பவர்ஸ்டார் ஆகசன் காட்டும் காட்சிகள் எல்லாம் பார்ப்பவர்களை பயமுறுத்துவதாக இருப்பதால் படத்தின் மொத்தகாட்சிகளும் சென்சார் செய்யப்பட்டு என்ட்கார்ட் மட்டுமே தேறியிருக்கும்.

No comments:

Post a Comment